கோயம்புத்தூர் காவல் துறை பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல் அலுவலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்துகொண்டார்.
அப்போது, காவலர்களிடம் பேசிய காவல் ஆணையர் சுமித் சரண், "கோவை மாநகர காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு சிறிய தவறுகூட நாம் செய்திருக்கும் நல்ல விஷயங்களை மக்களிடம் மறக்கடிக்க செய்துவிடும். எனவே அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தற்பொழுதுவரை அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றிவருகின்றனர். இனிமேலும் கவனமாகவும் மிக சிறப்பாக கடமையை ஆற்ற வேண்டும், காவலர்கள் யாருக்கேனும் வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வைரஸ் அறிகுறிகள் இருந்தால் காவலர்கள் தாமாக பரிசோதனை செய்துகொண்டு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கோவை மாநகரை பொறுத்தவரை காவல் துறை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்- காவல் ஆணையர் சுமித் சரண்! கரோனா தொற்று காலத்தில் காவலர்கள் அனைவரும் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், அதே சமயம் பாதுகாப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.