இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் நிலவி வரும் கரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சம் காரணமாக ஜூலை 1+ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும்.
ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகளை நடத்த முடியாது எனும் போது, அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வை மட்டும் எப்படி நடத்த முடியும்?. இடைப்பட்ட காலத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்த அதிசயமும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மாணவர்களின் அச்சமும், மன உளைச்சலும் விலக வாய்ப்பில்லை. ஆகவே நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.