இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு தொடர்வண்டி துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில், முழுக்க முழுக்க வட இந்திய பணியாளர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்வண்டி துறையின் ஆள்தேர்வுக்கான போட்டித் தேர்வுகள் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமாகவே நடத்தப்படுகின்றன. சென்னையிலுள்ள தெற்கு தொடர்வண்டித் துறை தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் கூட, அதில் உள்ள வட இந்திய அலுவலர்களின் முயற்சியால் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமவாய்ப்பு கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது. இந்தப் போக்கை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் இதுபோன்று புகார்கள் எழும் போது மத்திய அரசின் சார்பில் ஏதேனும் விளக்கம் அளிக்கப்படுவதும், அதன்பின் மீண்டும் பழையபடியே முறைகேடுகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.