தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நீட் தேர்வுக்கு நீதி கிடைக்கவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ் - அறிக்கை வெளியீடு

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் இந்த வழக்கிற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK founder Ramadoss has issued a statement
PMK founder Ramadoss has issued a statement

By

Published : Jul 19, 2020, 1:33 PM IST

நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; "உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் பானுமதி இன்றுடன் (ஜூலை 19) ஓய்வு பெறுகிறார். இவரையும் சேர்த்து நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வில் இடம் பெற்றிருந்த ஐந்து நீதிபதிகளும் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், நீட் தேர்வுக்கு எதிரான முதன்மை வழக்கின் விசாரணை 50 மாதங்களாகியும் இன்னும் தொடங்கவில்லை. இது பெரும் அநீதி. தற்போதுவரை நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப்பெற்ற அரசியலமைப்பு சட்ட அமர்வு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஆனால், அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் அனில் தவே, ஏ.கே. சிக்ரி, ஆர்.கே. அகர்வால், ஏ.கே. கோயல் ஆகிய நான்கு நீதிபதிகள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். ஐந்தாவது நீதிபதியான ஆர். பானுமதி இன்றுடன்(ஜூலை 19) ஓய்வு பெறுகிறார். ஆனால், இதுவரை முதன்மை வழக்கு விசாரணைக்கு வரவில்லை. நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நான்கரை ஆண்டுகளாக நிலுவையில் வைத்துக் கொண்டு, நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல; சமூக நீதியுமல்ல.

எனவே, நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக புதிய அரசியலமைப்பு சட்ட அமர்வை அமைக்க வேண்டும்; விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details