கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 606 பேர் பாதிக்கப்பட்டும், 12 பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு குறித்து உயர் அலுவலர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கூறுகையில், "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புக் கட்டைகள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வாகனங்கள் வெளியேற அனுமதி இல்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வீடு தேடி வர நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 விழுக்காடு மக்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அதிக பயணிகளை ஏற்றி வரும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதோடு ஓட்டுநர், நடத்துநர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.