தமிழ்நாடு

tamil nadu

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு!

By

Published : Jul 15, 2020, 1:58 AM IST

தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நான்கு பஞ்சாயத்துக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க 4 பஞ்சாயத்துக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமானதாமிர உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அதனை மூடுவதற்கு வலியுறுத்தி அப்பகுதி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் அறவழிப் போராட்டத்தை தொடங்கினர். நூறு நாள்களை கடந்த இந்த போராட்டத்தில் மே மாதம் 22 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றபோது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட வன்முறையைத் தொடர்ந்து 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. எதிர்ப்பு வலிவடைந்ததை அடுத்து தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடியது.

இந்நிலையில் இன்றளவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கரோனாவினால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சில்லாநத்தம், தெற்கு சிலுக்கன்பட்டி, ராஜாவின் கோவில், புதூர்பாண்டியாபுரம் உள்ளிட்ட ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து இன்று மனு ஒன்றை அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு வழ்ங்கியவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஊரடங்கு உத்தரவினால் எங்கள் ஊர் பகுதியில் மக்கள் வேலையின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த காலத்தில் அதில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்பொழுது ஆலை மூடி உள்ளதால் வேறு வேலைக்குச் செல்ல வழியில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறோம். ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நடைபெறுவதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details