ஈரோடு மாவட்டத்தில், செயல்பட்டு வரும் 20க்கும் மேற்பட்ட மைக்ரோ நிதிநிறுவனங்கள் மாவட்டம் முழுவதுமுள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களை ஒரு குழுவாக அமைத்து அவர்களுக்குக் கடன் தொகைகளை வழங்கி வருகிறது.
இந்தத் தொகையை கரோனா ஊரடங்கு காலத்திலும் செலுத்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாலும், கரோனா காலத்தில் தொழில்களை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்குள்ளாக்கியவர்களிடம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறியும் வட்டித் தொகை, தவணைத் தொகையை செலுத்திட வேண்டும் என்றும் வற்புறுத்தி வருவதாகவும் புகார்கள் எழுகின்றன.
மேலும் வட்டித்தொகை, தவணைத் தொகை செலுத்தாதவர்களிடம் கூடுதலாக அபராதத் தொகை கேட்டு, தொந்தரவு செய்து வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அம்மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மனுவில் கூறியதாவது; 'கரோனா பாதிப்புக்குள்ளான நாட்களில் வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ கடன் பெற்றவர்களிடமிருந்து தவணைத் தொகையையும், வட்டித் தொகையையும் பெறுவதற்கு நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பை இழந்து வாடுபவர்களிடம் கரோனா பாதிப்பு முடிவடையும் வரை, கடன் தவணைத் தொகை கேட்டு தொந்தரவு செய்திடக் கூடாது.
மேலும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறி, மைக்ரோ நிதி நிறுவனங்கள் கடன் வழங்கிய அனைத்துத் தரப்பு மக்களை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கி பணம் வசூல் செய்து வருவதாகவும், இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், பெற்ற கடனுக்கான தொகையை செலுத்த முடியாமல் தற்கொலை முடிவு வரை செல்கின்றனர் எனவும் தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மைக்ரோ நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றவர்கள், அவர்களது தவணைத் தொகையையோ, வட்டித் தொகையையோ செலுத்த வருகிற ஆகஸ்ட் மாதம் வரை விதிவிலக்கு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கதிரவன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.