பயங்கரவாதத்திற்கு எதிரான ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவதற்கான மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா சார்பில் மஹாவீர் சிங்வி பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது பேசிய அவர், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் ஆதரவாளரும், உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அதன் ஊற்றுக்கண்ணும், பயங்கரவாதத்தின் தொட்டிலுமாக பாகிஸ்தான் விளங்குகின்றது. அத்தகைய நாடு இந்த மன்றத்தில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தனது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக பின்னடைவை உருவாக்குவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதையே நோக்கமாக கொண்டுள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு, 2008 மும்பை தாஜ் விடுதி தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த பயங்கரவாதிகள் தொடர்பான பல ஆதாரங்களை இந்தியா பகிர்ந்து கொண்டாலும், அவற்றின் மீது உறுதியான நடவடிக்கைகளை அந்நாடு இன்று வரை எடுக்கவில்லை. இந்த கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட 1267 பேர் மனித உரிமை ஆணையக் குழுவால் தடைசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசின் விருந்தோம்பலை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.