திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து ஒரு நாளிற்கு 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து 1602 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனா பரவுவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, புகார் மனு அளிக்க நினைக்கும் பொதுமக்கள் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக தங்களது புகாரை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நேரடியாக சந்தித்து மனு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் தங்களது குறைகளை திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவில் இயங்கிவரும் பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக இனி வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் காலை 11.30 மணி முதல் 12.30 மணிவரை 9487593100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை வீடியோ கால் மூலமாக தெரிவிக்கலாம்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:"இணையத்தளம் மூலம் தனிநபர் மீது அவதூறு பரப்பும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது"