சிவகங்கை மாவட்டம், பச்சேரியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "சிவகங்கை மாவட்டம் பச்சேரி கண்ணூர் பகுதிகளில் உள்ள நஞ்சை மற்றும் புஞ்சை பகுதிகளில் ஏராளமானோர் பரவலாக விவசாயம் செய்து வருகிறோம்.
இந்நிலையில், எங்கள் பகுதியில் வசித்து வரும் கண்ணூர் ராஜேந்திரன் என்பவருக்கு அவரது பட்டா நிலத்தில் மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியில் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே அள்ளிக் கொள்ள வழிவகை உள்ளது . மேலும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மிகாமலும், சிறிய இயந்திரங்கள் மூலம் தினமும் குறைந்தது ஐந்து லாரிகள் மட்டுமே மணல் அள்ளி கொள்ளுவதற்கு அனுமதி உள்ளது.
ஆனால் இந்த அனுமதியை பெற்றவர்கள் சட்டவிரோதமாக மிகப்பெரிய ஜேசிபி போன்ற இயந்திரங்கள் மூலம் பெரிய லாரிகள் மூலம் மண்ணை அள்ளி கடத்திச் செல்கின்றனர்.
இதனால், விவசாய நிலங்களில் மட்டுமல்லாது நீர்பிடிப்பு பகுதியான கண்ணூர் கண்மாய், வெங்கட்டி ஆறு, பாப்பாகுடி கண்மாய் போன்ற பல பகுதிகளும் நீரின்றி வறண்டு வருகின்றன.