நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீ.
இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் தன்னை பணி செய்யவிடாமலும் சாதிய ரீதியாக குறிப்பிடுவதாகவும் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
அதன்படி காவல்துறையினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் கனகராஜ், தர்மலிங்கம் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் அக்கலாம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில், “ஊராட்சி மன்ற தலைவர் ராஜீ தங்களது பகுதிக்கு இதுவரை எவ்வித நன்மையும் செய்யவில்லை. தேர்தல் முன்விரோதம் காரணமாகவே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார்” என கூறியிருந்தனர்.
பொதுமக்களிடமிருந்து இந்தப் புகார்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.