இந்திய அணியின் முன்னாள் மனநிலை, செயல்திட்டப் பயிற்சியாளராக பேடி உப்டான் 2008 முதல் 2011 வரை செயல்பட்டார். தனது கிரிக்கெட் அனுபவங்களை 'தி பேர்ஃபூட்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தக வெளியீடு தொடர்பான நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைபெற்றது.
கும்ப்ளேவின் ஐடியாவை மாத்தி யோசித்த தோனி! - அனில் கும்ப்ளே
"அணியின் ஆலோசனை கூட்டத்திற்கும், பயிற்சிக்கும் தாமதமாக வரும் வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளேவின் தண்டனையை தோனி சற்று மாற்றி யோசித்து, அதில் வெற்றியும் கண்டார்" என்று, இந்திய அணியின் முன்னாள் மனநிலை பயிற்சியாளரான பேடி உப்டான் தெரிவித்துள்ளார்.
அப்போது, தோனி குறித்து அவர் கூறுகையில், "நான் 2008இல் இந்திய அணியில் இணைந்திருந்தேன். அப்போது, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளேவும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனியும் இருந்தனர். அப்போது அணியின் ஆலோசனை கூட்டத்திற்கும், பயிற்சிக்கும் தாமதமாக வரும் வீரர்களுக்கு ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அனில் கும்ப்ளே கூறினார்.
பிறகு, தோனியும் இதே தண்டனையைத்தான் முன்மொழிந்தார். ஆனால், அனில் கும்ப்ளேவின் யோசனையை அவர் சற்று மாற்றி யோசித்தார். ஆலோசனை கூட்டத்திற்கும், பயிற்சிக்கும் தாமதமாக வரும் வீரர்களுக்கு பதிலாக, அனைவரும் தலா ரூ.10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பிறகு, அணியில் எந்த வீரரும் தாமதமாக வரவே இல்லை" என்றார். இது தோனி ரசிகர்களிடையே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.