கரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உணவு உற்பத்திக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்களித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செய்த விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல், விவசாயிகளைப் பெரும் கவலையடைய செய்துள்ளது.
குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் தேக்கமடைந்துள்ளன.
விவசாயிகளிடமிருந்து அவர்கள் விளைவித்த வேளாண் பொருள்களை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கொள்வமுதல் செய்யும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் - ராஜபாளையம் விவசாயிகள் கோரிக்கை இதனால், ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள நேரி கண்மாய், கடம்பன் குளம் கண்மாய் , பெரியகுளம் கண்மாய் என பல்வேறு கண்மாய்களை உள்ளடக்கிய பாசன விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு கொள்முதலுக்காக காத்திருக்கின்றன.
ராஜபாளையம் தென்காசி சாலை பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் இயங்கிவந்த நெல் சேமிப்பு கிடங்கு மூடப்பட்டுள்ள சூழலில் அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடத்தை அலுவலர்கள் இன்னும் தேர்வு செய்யாமல் அலட்சியம் காட்டிவருவதாக அறிய முடிகிறது.
இதனால் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக வீதிகளில் நெல்லை கொட்டி, தார் பாய்கள் போட்டு மூடி வைத்து காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நெல்லானது, வெயிலிலும் பனியிலும் காய்ந்து தரம் குறைந்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் போதிய தொழிலாளர்கள் இல்லாததாலும், லாரிகள் இயங்காததாலும், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இது குறித்து விவசாயி முருகன் கூறுகையில், "ராஜபாளையம் பகுதியில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதியில் நெல் களஞ்சியங்கள் இல்லை. நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. ஆகையால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 27 ரூபாய் செலவு செய்த போதும் 28 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் என வருமானம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு போதிய விலை கிடைக்கவில்லை. விளைந்தவற்றை வியாபாரிகளும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. விளைவித்த நெல்களை சேமிப்பு கிடங்கில் வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகளும் தற்போது செயல்படவில்லை. ஆகையால், சாலைகளில் நெல்லை போட்டு மிகுந்த மன உளைச்சலில் நிற்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக அரசே விளைந்த நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.