மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் நினைவில்லம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள தாதர் என்ற பகுதியில் அம்பேத்கர் வசித்த வீடு, அவரது நினைவு இல்லமாக உள்ளது. இங்கே கீழ்தளத்தில் அருங்காட்சியகம் உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் சட்டமேதை அம்பேத்கர் பயன்படுத்திய பொருள்கள், அவர் எழுதிய நூல்கள் ஆகியவற்றை காண முடியும்.
இந்நிலையில் அண்ணல் அம்பேத்கர் நினைவில்லத்தில் நேற்றிரவு நுழைந்த அடையாளம் தெரியாத சமூக விரோதிகள், அந்த வீட்டின் முன்பகுதியை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
மும்பை அம்பேத்கர் இல்லம் சேதப்படுத்தப்பட்டதற்கு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முற்போக்கு இயக்கங்கள், திரையுலக பிரமுகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் திரைப்பட முன்னணி இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பா.ரஞ்சித் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் பா. ரஞ்சித், "பாபாசாகேப் அம்பேத்கரின் வீட்டை சேதப்படுத்திய கொடூரமான வெறிச் செயலை நான் கண்டிக்கிறேன்.
பார்ப்பனியம் பௌத்தத்திற்கு எதிராக செய்ததை போன்றே, அண்மைக்காலமாக சில சமூக விரோத கும்பல்கள் அம்பேத்கரின் மாண்பை குலைக்கப் பார்க்கிறார்கள். இரண்டும் கண்டிப்பாக நிறைவேறாது.
மகாராஷ்டிரா முதலமைச்சரும், காவல்துறை தலைவரும் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கொடூரமான சாதி மனப்பான்மை கொண்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலம் கலாச்சார மையம் சார்பில் கோருகிறோம். #ஜெய்பீம்" என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.