கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜூன் 30ஆம் தேதி வரை, இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில மாவட்டங்களில் ஒரே மண்டலத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் மற்ற மாவட்டத்திற்கும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பாலும்; நீலகிரி மாவட்டத்திற்குள் வெளி மாவட்ட மக்களும், சினிமா பிரபலங்களும் வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
குறிப்பாக கடந்த 13ஆம் தேதி முதல் நீலகிரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் சென்னையில் இருந்து வந்த நபர்களால் தொற்று அதிகரித்துள்ளது.
இதனையும் கருத்தில் கொண்டு இன்று(ஜூன் 21) முதல் மாவட்ட, உள் மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, உதகை அருகே நகரின் நுழைவு வாயில் பகுதியான இந்து நகர்ப் பகுதியில் நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள், காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்களை தீவிர சோதனைக்குட்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.