தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வீட்டில் இருந்து தேர்வு எழுதுவதை ரத்து செய்ய கோரிய வழக்கு: பதிவாளர் மனு தாக்கல் செய்ய உத்தரவு! - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை: கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் பல்கலைக்கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras High Court Madurai Branch
Madras High Court Madurai Branch

By

Published : Sep 22, 2020, 3:02 AM IST

ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பேராசிரியர் முரளி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், " கரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இதனால், அரசு ஆன்லைன் வழியாக தேர்வை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 9 மணிக்கு பல்கலைக்கழகங்களில் இருந்து வினாத்தாள் அனுப்பப்படும் நிலையில், மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக 9.45 மணிக்கு அனுப்பப்படுகிறது.

அதற்கான விடைகளை பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்கள் எழுதி, 2 மணிக்குள்ளாக பி.டி.எப் (PDF) வடிவில் வாட்சப் வழியாக கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும்.

கல்லூரி நிர்வாகம் அதனைத் தொகுத்து 5 மணிக்குள்ளாக பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள்களை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது முறையான, சரியான தேர்வு முறையாக அமையாது. மாணவர்கள் புத்தகங்களையோ, கையேடுகளையோ பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகள், வரும் தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோல தேர்வை நடத்துகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. கல்வியின் தரத்தையும், மாணவர்களின் உயர்கல்வி தரத்தை குறைக்கும் வகையில் இது அமையும்.

இது அரசின் உத்தரவை மீறும் செயலாக இருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிடவோ அல்லது பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் முடிவின் அடிப்படையில் தேர்வு தொடர்பான முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் பதிவாளரின் உத்தரவு தொடர்பான இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details