தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மதுரையில் எலும்பு வங்கி அமைக்க கோரிய வழக்கு - மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு! - எலும்பு வங்கி

மதுரை: அரசு ராசாசி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக உத்தரவிடபட்டுள்ளது.

Madras High Court Madurai Branch
Madras High Court Madurai Branch

By

Published : Sep 22, 2020, 2:51 AM IST

மதுரையை சேர்ந்த வெற்றி செல்வம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "இந்தாண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு 2017ஆம் ஆண்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் ஏலும்பு சேகரிக்கும் வங்கி உருவாக்க சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், மூன்று வருடங்களாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மனித உறுப்பு மாற்று சட்டத்தின்படி சிறுநீரகம், எலும்பு மற்றும் பிற உறுப்புகள் தானத்திற்கு சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2005‌ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் எலும்பு வங்கி சென்னையில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. விபத்தினால் பலர் உயிரிழப்பதற்கு எலும்பு முறிவே காரணமாக அமைகிறது.

தென் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனையாக மதுரை ராசாசி மருத்துவமனை உள்ளது. மனித எலும்பு வங்கி உருவாக்குவதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் புற்றுநோய் மற்றும் எலும்பு முறிவு ஆகிய நேரங்களில் எலும்பு மாற்றத்திற்கு உதவியாக இருக்கும். மேலும் எலும்பு தானம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.

இதனால், 2017ஆம் வழங்கப்பட்ட உத்தரவுபடி, மதுரை ராசாசி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்கி அதற்கான பணியாளர்கள், உபகரணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அலுவலர்களிடம் மனு அளித்தும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

அதனால், மதுரை ராசாசி மருத்துவமனையில் எலும்பு வங்கி உருவாக்கி, அதற்கான தனி துறை அமைத்து, பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் ஏற்பாடு செய்து எலும்பு தானம் செய்வதன் அவசியம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்யவும், தமிழ்நாடு மருத்துவ கல்வித்துறை இயக்குநரகத்தின் இயக்குநர் காணொலி காட்சி மூலம் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details