முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் அம்மா மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் இருந்தாலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தான் இந்தத் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே, சென்னை மாநகர மக்கள் அரசு அறிவித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும். கரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் கடமையுணர்வோடு நம்மைக் கட்டுப்படுத்தி, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றி நடந்தால்தான் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.
இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற பொதுக் கழிப்பறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதி, மக்கள் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் எல்லாம் கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்யப்படுகிறது. அதோடு, நம்முடைய பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றபொழுது, அவர்களை அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்து, மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தி வருகிறார்கள்.