மலை மாவட்டமான நீலகிரி 55% வனப்பகுதியில் புலி, சிறுத்தை - கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு, உதகை தாவரவியல் பூங்காவிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது .
பின்னர் அப்பகுதியிலிருந்து வெளியேறி, உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையில் முன்னங்கால் காயமடைந்த நிலையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அச்சிறுத்தையைப் பிடித்து, உதகை அரசு கால்நடை மருத்துவமனையில் வைத்து 20 நாட்களாக, நான்கு கால்நடை மருத்துவர்களைக் கொண்ட குழு மூலம் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது சிறுத்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறுத்தைக்கு நாள்தோறும் ஒரு கிலோ அளவிற்கு மாமிசம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சிறுத்தை குணம் அடைந்தவுடன், சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவிற்கு எடுத்துச்செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக சென்னை வண்டலூரில் இருந்து கால்நடை மருத்துவக் குழு உதவிக்கு வந்தது. பிறகு சிறுத்தை சென்னை வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.