கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன் லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புக்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விசாரணையை தள்ளிவைத்திருந்தது.
இந்த நிலையில், இன்று(ஆக.3) இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாட வேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
நாளொன்றுக்கு , ஒரு ஆசிரியர், ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது. 1 முதல் 8 வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங்கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.