திருப்பத்தூர் வாணியம்பாடியில் கரோனா தடுப்பு பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவனருள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்த மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 189 பேர் திருப்பத்தூர், நாற்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வாணியம்பாடி பகுதிகளில் கரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரியபேட்டை உள்பட 20 வார்டுகளில் முழுக்கவனம் செலுத்தி, நாள் ஒன்றிற்கு ஆறு மருத்துவக் குழுவுடன் ஆறு முறை மருத்துவ சிகிச்சை முகாம், கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் உள்பட அனைத்து தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம்.