தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டெல்லியில் பயங்கரவாதிகள் இருவர் கைது : நொய்டாவில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்! - டெல்லியில் பயங்கரவாதிகள் கைது

லக்னோ : டெல்லியில் பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் எல்லையில் அமைந்துள்ள நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

டெல்லியில் பயங்கரவாதிகள் கைதானதன் எதிரொலி - எல்லை பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்!
டெல்லியில் பயங்கரவாதிகள் கைதானதன் எதிரொலி - எல்லை பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்!

By

Published : Nov 18, 2020, 7:42 PM IST

டெல்லி அருகே உள்ள சாய் காலே கான் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மில்லினியம் பூங்கா அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டதாக காவல்துறையினரின் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவர்களிடமிருந்து 2 செமி ஆட்டோமேட்டிக் கைத்துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதனிடையே, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த தீவிர சோதனைகளை மேற்கொள்ள காவல்துறை கூடுதல் ஆணையர் ரன்விஜய் சிங் உத்தரவிட்டார். மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் நொய்டாவில் தங்குமிடம் தேட முயற்சிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் இருந்துவந்த எச்சரிக்கையை அடுத்து அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இருவரும் ஜம்மு- காஷ்மீரில் வசிக்கும் சனாவுல்லா மீரின் மகன் அப்துல் லத்தீப் மிர், பஷீர் அகமதுவின் மகன் அஷ்ரப் கட்டானா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details