தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நெல்லை பேருந்து கட்டுமான பணி குறித்து பொதுநல மனு தாக்கல் - ஸ்மார்ட் சிட்டி

திருநெல்வேலி பேருந்துநிலையம் கட்டுமான பணி குறித்து ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Oct 5, 2020, 8:33 PM IST

நெல்லையை சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், "2018ஆம் ஆண்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்தை சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன.

அப்போது பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க சுமார் 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு அருகே தாமிரபரணி ஆறு உள்ளதால், அப்பகுதி முழுவதும் மணல் நிறைந்த பகுதியாகும். எனவே 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தன. இதனை நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் சட்டவிரோதமாக கடத்த முயன்றனர்" எனக் கூறப்பட்டது.

மேலும், அந்த மனுவில், பல லோடு மணல் கேரளாவிற்கு கடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் மணல் அள்ள பொது ஏலம் விட அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு மணல், களிமண்ணை சட்டவிரோதமாக நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் உடந்தையோடு விற்பனை செய்தவர்கள் மீது சிறப்பு விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பொதுநல மனு வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது நீதிபதிகள், திருநெல்வேலி மாநகராட்சி வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட மணல் என்ன வகையைச் சார்ந்தது? எத்தனை யூனிட் மணல் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது? அது எத்தனை லாரிகளில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனுடைய மதிப்பீடு என்ன என்பது குறித்து சரமாரியாக கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இதற்கு திருநெல்வேலி மாநகராட்சி தரப்பில் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட மணல் என்ன வகை சார்ந்தது என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக சார்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தும் ஆய்வு நடத்தக் கூடிய அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் குழு எந்த துறையில் நிபுணத்துவம் பெற்றது என்பது குறித்தும் ஆய்வு அறிக்கை மற்றும் வழக்கின் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details