நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு வழக்கு தீர்ப்பை எதிர்த்து தேசியத் தேர்வு முகமை மேல் முறையீடு! - appeal on cbcid inquiry of Neet malicious
சென்னை: நீட் தேர்வின் ஓஎம்ஆர். விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட முறைகேடு விவகாரம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தேசியத் தேர்வு முகமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் திருத்தப்பட்ட ஓஎம்ஆர். விடைத்தாள்களை தேசியத் தேர்வு முகமை அக்டோபர் 5 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. அப்போது 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து மற்றொரு ஓஎம்ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
594 மதிப்பெண் என்ற புகைப்பட ஆதாரங்கள் மாணவன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக, சிபிஐ அலுவலர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து விசாரிக்க கோரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அலுவலர்களை நியமித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தேசியத் தேர்வு முகமை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஓஎம்ஆர். விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து மத்திய அரசே விசாரித்துவரும் நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவையற்றது எனவும், அதனால் தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கு தொடர்ந்த மாணவன் மனோஜ், சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தது.