உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், இதுவரை 3 ஆயிரத்து 872 பேர் பாதிக்கப்பட்டும், 53 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர செங்கல்பட்டில் முழுமையான ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை பொது மக்கள் பலரும் மீறி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் மதிவாணன் இன்று நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தார். விதிமுறைகளை மீறி திறந்த கடைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன.