தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'சென்னையை விட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்?' - சு. வெங்கடேசன் எம்பி - முதலமைச்சர் விளக்கம்

மதுரை: சென்னையைக் காட்டிலும் மதுரையில் கரோனாவால் இரண்டு மடங்கு மரணம் நிகழ்வதற்கு என்ன காரணம், என்று முதலமைச்சர் விளக்கமளிக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்
நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்

By

Published : Jul 9, 2020, 4:16 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநில அரசு, கரோனா தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென் மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. இதனைப் பலமுறைச் சுட்டிக்காட்டிய பிறகும் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதது வருத்தமளிக்கிறது.

சென்னையில் தொற்றால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 24ஆகவும் இருந்தபோது மதுரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக இருந்தது. சென்னையில் தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 42ஆகவும் இருக்கும்போது மதுரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 86ஆக இருக்கிறது.

ஒரே நோய், சென்னையைவிட மதுரையில் இரண்டு மடங்கு இறப்பினை நிகழ்த்துவது எதனால்? இதனைக் கரோனாவால் நிகழும் மரணமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அதனைக் கையாள்வதில் இருக்கும் நிர்வாகப் போதாமையாலும் கவனமின்மையாலும் நிகழும் மரணமாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

ஆம்புலன்ஸ் பிரச்னை மிகமிக அடிப்படையானது. ஆனால், இதனை மாநில அரசு முறையாகக் கையாளவில்லை. சென்னைக்குத் தேவையான ஆம்புலன்சுகளுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பிற மாவட்டங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆம்புலன்சுகளை உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்குத் திருப்பியனுப்ப வேண்டும்.

அதேபோல சோதனை மேற்கொள்வதில் பெரும் அலட்சியப்போக்கு நிலவுகிறது. குறைந்தபட்சம் நாள்தோறும் 3 ஆயிரம் சோதனையை நடத்தினால் மட்டும் மதுரையில் தொற்று பரவும் வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியும்.

சென்னையில் நிகழ்ந்ததைவிட இரு மடங்கு மரணங்கள் மதுரையில் நிகழ என்ன காரணம்? நோயாளிகளைக் கண்டறிவது, அவர்களை உரிய முறையில் மருத்துவமனைக்குக் கொண்டுசேர்ப்பது, அவர்களுக்குத் தேவையான சிகிச்சையைக் கொடுப்பது ஆகியவற்றில் எதில் பிரச்னை இருக்கிறது. அதனைச் சரிசெய்ய மாநில அரசு செய்யும் முயற்சிகள் என்ன என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details