தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இந்திய ரயில்வேயின் அறிவிப்பால் 30 பயணிகள் ரயில்களை தமிழ்நாடு இழக்கும் - சு.வெங்கடேசன் எம்.பி., - மத்திய அரசை குற்றஞ்சாட்டிய எம்.பி. வெங்கடேசன்

மதுரை: இந்தியா முழுவதும் 508 பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாக மாற்றினால் 30 பயணிகள் ரயில்களை தமிழ்நாடு இழக்கும் என்று சு. வெங்கடேசன் எம்.பி., குற்றஞ்சாட்டியுள்ளார்.

எம்.பி.வெங்கடேசன்
மத்திய அரசை குற்றஞ்சாட்டும் எம்.பி.வெங்கடேசன்

By

Published : Jun 18, 2020, 3:29 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"ரயில்வே வாரியம் நேற்றைய தினம் (17-06-2020) ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வேயில் இயங்கும் 508 பயணிகள் ரயிலை விரைவு வண்டிகளாக மாற்றி ஜூன் 19ஆம் தேதிக்குள், அதாவது நாளை பிற்பகல் 4 மணிக்குள் முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து ரயில்வேக்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

200 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் 508 பயணிகள் ரயில்கள் நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு, கட்டணங்கள் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு விரைவு ரயில்களாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் 34 இணை ரயில்கள் அடங்கும். அதில் தமிழ்நாட்டின் 30 ரயில்களும், கேரளத்தின் 4 ரயில்களும் அடங்கும்.

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கும், புதுவையிலிருந்து திருப்பதிக்கும், விழுப்புரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், மதுரையிலிருந்து கொல்லத்துக்கும், கோவையிலிருந்து கண்ணனூருக்கும் இயங்கிக்கொண்டிருக்கும் பயணிகள் ரயில்கள் இதில் அடங்கும்.

விரைவு வண்டிகளாக மாற்றப்படுவதால் பல ஊர்களில் ரயில்கள் நிற்காது, இதன் மூலம் நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிற்றூர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும். வணிகத்துக்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், கட்டணம் இரு மடங்கு அதிகப்படுத்தப்படும்.

கோவிட்-19 ஐ பயன்படுத்தி, தொழிலாளர் நலச்சட்டங்களை பறித்தது, பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்தது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையின் பகுதியாக மத்திய அரசு இதை செய்ய துணிந்துள்ளது. அதுவும் 48 மணி நேரத்தில் இதற்கான நடவடிகை எடுத்து அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு பயணிகள் ரயிலும் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பல போராட்டங்களை நடத்தி பெறப்பட்டதாகும். அவை அனைத்தையும் ஒரே உத்தரவில் கிழித்தெறியும் ரயில்வே வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக எனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். அனைத்துப் பகுதி மக்களுக்கும் எதிரான இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details