புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ! - Salem district news
சேலம்: ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவிற்கு உள்பட்ட எம்.செட்டிபட்டி, சிக்கம்பட்டி, சக்கரைசெட்டிப்பட்டி செங்கரடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தார்சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டன.
இதேபோல் செங்கரடு, சக்கரைசெட்டிப்பட்டி கிராமங்களில் உள்ள மண்சாலைகள் தொடர் மழையினால் சேரும் சகதியுமாக மாறியது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனையடுத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் எடுத்துச்சென்றார்.
பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சுமார் ரூ. 1கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்க ஆணையிட்டார்.
இந்த ஆணையின்படி இன்று (செப்.8) 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகளை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மணி, மல்லிகா, ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேந்திரன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.