திருவண்ணாமலை:மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ. வேலு, தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு பேசுகையில், ஜூன் மாதம் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் 465ஆக இருந்தது. இரண்டு இறப்பும் இருந்தது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,181ஆக உள்ளதென்றும், இறப்பு 12ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'ஆரம்ப காலகட்டத்தில் திருவண்ணாமலை பச்சை மண்டலமாக திகழ்ந்து வந்தது. தற்போது நிலைமை மோசமாக மாறி வருகிறது.
வந்தவாசி பகுதியில் கரோனா தொற்றால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. ஆரணியில் மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த கரோனா தொற்று குறித்து மாவட்ட நிர்வாகம் எத்தகைய தடுப்புகளை செய்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக மனு அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேவூர் ராமசந்திரன் தொகுதி மக்கள் மீது அக்கறை கொள்ளாமல், திறன் இல்லாத அமைச்சராக செயல்படுவதாகவும், அமைச்சர் உள்ள பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களைக் கூட உரிய முறையில் பராமரிக்காமல் மாவட்ட அமைச்சர் ஜீரோ அமைச்சராக இருந்து வருவதாகவும் எ.வ வேலு குற்றஞ்சாட்டினார்.