கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடலோர பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இந்த காலங்களில் கடல் நீர் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கம். தற்போது வழக்கமாக உள்ள கடல் சீற்றத்தை விட இந்த ஆண்டு அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. இன்று (ஜூலை 12) ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால் போன்ற மீனவ கிராமங்களில் திடீரென கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
இந்நிலையில், கடல் அலையில் சிக்கி கடலோரம் இருந்த கட்டுமரம், வள்ளம் உள்ளிட்டவை சேதமடைந்தது. திடீரென ஏற்பட்ட கடல் அலையால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட அழிக்கால் மீனவ கிராமத்தில், நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன் ஆய்வு மேற்கொண்டார். இங்கு தூண்டில் வளைவு அமைக்க பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.