தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையிலான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து உடைத்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவர் சுபாஷ் பண்ணையார், அனிதா ராதாகிருஷ்ணனின் காரை உடைத்தாகவும் மேலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய காணொலி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் ரவுடிகளை வளர்ப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.
அப்போது, ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமா சங்கர் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.