தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக உடனிருக்கும்: ஸ்டாலின் - ஸ்டாலின் பிரதமர் சந்திப்பு

இந்தியா - சீனா எல்லை பிரச்னையில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணை நிற்கும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி

MK Stalin speech in all party meeting with PM modi
MK Stalin speech in all party meeting with PM modi

By

Published : Jun 19, 2020, 10:19 PM IST

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) இந்தியா – சீனா எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

அந்த உரையில், "முதலில், எல்லையில் இறுதிவரை போராடி- தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள - அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்கும், வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் குறிப்பிட்டுள்ளது போல், “உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போகாது”. அந்தத் தியாகங்கள் இந்த நாட்டை மேலும் ஒருமைப்படுத்தி, நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும். இன்று நாம் மிக கடினமான தருணத்தில் இருக்கிறோம். ஒருபக்கம் கோவிட்-19 பேரிடருடனான போராட்டம்; இன்னொரு பக்கம் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி!

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் இயக்கம். இங்கே பல்வேறு அரசியல் இயக்கங்கள், வெவ்வேறு கருத்தியலுடன் இருக்கலாம். நாட்டுப் பற்று என வந்தால் நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம்.

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்; அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. திமுகவைத் தோற்றுவித்த அண்ணா, “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்றார். எனவே, நமது வீடான இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்க; நாட்டிற்கே முன்னுரிமை. தன்னுடைய நிலத்திற்கும் மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு.

திமுகவைப் பொறுத்தவரை அனைத்து போர் காலங்களில் ஏற்பட்ட நெருக்கடியான சூழல்களில் நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம். பண்டித ஜவகர்லால் நேருவாக இருந்தாலும்; இந்திரா காந்தியாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாயாக இருந்தாலும், இந்நாட்டு பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம்.

இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. “அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்தியா தனது சுயமரியாதையையும், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும்” என்ற பிரதமரின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

“இந்தியா அமைதியை விரும்புகிறது. தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது” என்றும் பிரதமர் கூறியிருப்பதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வரவேற்கிறேன். எனவே, இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போர்க்குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details