ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இடதுகை பந்துவீச்சாளரான இவர், தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் பல முன்னிணி பேட்ஸ்மேன்களை கதிகலங்கச் செய்து வருகிறார்.
பந்துவீச்சில் மட்டுமல்ல... விக்கெட் எடுப்பதிலும் வேகம் காட்டிய ஸ்டார்க்!
நாட்டிங்ஹாம்: ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தப் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 15 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. 289 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், கெயில், ரஸல், ஹோல்டர், பிராத்வேயிட், ஷெல்டான் கோட்ரல் ஆகியோரது விக்கெட்டுகளை ஸ்டார்க் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர், 10 ஓவர்களில் 46 ரன்களை மட்டுமே வழங்கி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். 78 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக்கின் சாதனையை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.