இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளே ஆச்சரியப்படும் விதத்தில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கரோனா பரிசோதனை கூடங்களை அமைத்து, அதிகமான கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு நோய் தொற்றிலிருந்து குணமாவோரின் எண்ணிக்கையை பன்மடங்காய் பெருக்கி, தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை நாடே, உளமாற பாராட்டுவதை பொறுக்க முடியாமல் அவதூறுகளையும், உண்மைக்கு மாறான புரளிகளையும் அறிக்கைகள் என்னும் பெயரில் திமுக நடத்துகிற அருவெறுப்பு அரசியலின் வரிசையில் இப்போது மின்கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பதாக செந்தில் பாலாஜியை வைத்து திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கை உண்மைக்கு மாறானது,
ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே இருப்பதற்கு ஏதுவான நிலையை உருவாக்கியது, மின்தடை என்கிற சொல்லுக்கே அவசியமில்லா காலத்தை உருவாக்கியதோடு, மின்கட்டணத்தை செலுத்துவதற்கான நெடிய அவகாசத்தையும் அதிமுக அரசு வழங்கியது.
ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட காலத்தில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே வீடுகளில் இருந்ததாலும், அதனால் அவர்கள் பயன்படுத்தும் மின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு. மேலும், கரோனா காலத்தில் வீடுகள், மற்றும் அலுவலகங்களுக்கு சென்று பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை கணக்கெடுப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு, முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவையே அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதனை கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்கிற உணர்வையும், அவப்பழியையும் அரசு மீது சுமத்த திமுக தொடர்ந்து திட்டமிட்டு, விஷம பிரச்சாரம் செய்துவருகிறது.
ஏதோ ஒருவருக்கு கூடுதல் கட்டணம் வந்துவிட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல, கூடுதல் கட்டணம் வந்திருப்பதாக குறிப்பிடப்படும் நபருக்கும் தெரியும், அதற்காக முறையீடு செய்து தனக்கான நியாயத்தை பெறுவதற்கான வழிமுறைகள் மின்சார வாரியத்தில் நுகர்வோர் குறைதீர்ப்பில் இருக்கிறது என்பதோடு, தவறிழைக்கப்பட்டிருந்தால் அதற்கான சட்ட முறையீடும் மின் பயனீட்டாளர்களுக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
கரோனா பரவலை தடுக்க தினமும் உரிய திட்டங்களை தீட்டி, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியும், கரோனா தடுப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றிவரும், சாமானிய விவசாய குடும்பத்தில் பிறந்த முதலமைச்சரை பார்த்து, ராஜ வாழ்க்கை வாழ்கின்றார் என்று வஞ்சக குணம் படைத்த செந்தில் பாலாஜி சொல்வது வேடிக்கையாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.