திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் பள்ளிகளில் அதிக அளவு தேர்ச்சி - சிறப்பு பரிசு வழங்கிய அமைச்சர்
திருநெல்வேலி: ஆதிதிராவிடர் பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு பரிசு வழங்கினார்.
இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அதிக மாணவர்களை தேர்ச்சி அடைய செய்த ஆசிரியர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயை சிறப்பு பரிசாக அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ 12.51 கோடி மதிப்பில் கரோனோ வைரஸ் சிறப்பு நிதி உதவி தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் நிவாரண உதவியையும் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.