தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

30 நிமிடங்களில் கரோனாவைக் கண்டறியும் கருவி: தொடங்கி வைத்த அமைச்சர்!

தூத்துக்குடி: அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.22 லட்சம் மதிப்பில் அதிநவீன கரோனா பரிசோதனைக் கருவியின் செயல்பாட்டை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தொடங்கிவைத்தார்.

30 நிமடங்களில் கரோனாவை கண்டறியும் கருவி:தொடங்கி வைத்த அமைச்சர்
30 நிமடங்களில் கரோனாவை கண்டறியும் கருவி:தொடங்கி வைத்த அமைச்சர்

By

Published : Jun 26, 2020, 6:46 PM IST

தூத்துக்குடியில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது. தூத்துக்குடியில் அண்மையில் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து, கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றை கண்டறிய ஆர்.டி.பிசிஆர்‌ மற்றும் இக்லியா கருவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் நிறுவப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூடுதலாக ஒரு ஆர்.டி.பிசிஆர் (Real time PCR) கருவியும், நோய்த் தொற்றைத் துல்லியமாக கணக்கிட உதவும் அதி நவீன தானியங்கி, ஆர்என்ஏ-வை பிரித்தெடுப்பான் கருவியையும் நிறுவ மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பயனாக, கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாகவும், துல்லியமாகவும் கணக்கிட உதவும் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தானியங்கி ஆர்.என்.ஏ.பிரித்தெடுப்பான் ஆய்வகம் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா இன்று(ஜூன் 26) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு ஆய்வகத்தைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தூத்துக்குடிக்கு சென்னை உள்பட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இனி மாவட்டத்தில் நோய்ப்பாதிப்பு எண்ணிக்கை குறையும். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தின் மூலம் கரோனா பற்றிய ஆய்வு முடிவுகளை 30 நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 266 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என மூன்று கோடியே 66 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை அவர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரடியாக சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 756 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக ஆயிரத்து 600 படுக்கைகள் தயாராக உள்ளன. மக்கள் தேவையின்றி கரோனா குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details