தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மீனவர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் - மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மீனவர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Jul 16, 2020, 12:51 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சுருக்குமடி வலையினைப் பயன்படுத்த நாடு முழுவதும் தடை உள்ளது. இத்தகைய வலைகளை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ்வலைகளைப் பயன்படுத்துவதால் மீன்வளம் மற்றும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும். இந்த வலைகளைப் பயன்படுத்துவது குறித்து புகார்கள் வருவதோடு அவ்வப்போது மீனவர்களிடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

ஆகவே, மீனவர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் நடக்காமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கவும், இந்த வலைகளை பயன்படுத்துவதற்கு மாற்றாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு அரசு வழங்கும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ பிரதிநிதிகள், இவ்வலைகளின் பயன்பாட்டினை உடனடியாக தடை செய்தால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த வலைகளை அனுமதிக்க வேண்டும் எனவும் இத்தொழிலில் இருந்து மாற்று மீன்பிடி தொழிலுக்கு மாறுவதற்கு மூன்று முதல் ஐந்தாண்டு கால அவகாசம் தேவை என்றும், படிப்படியாக மாற்றுத் தொழிலுக்கு மாறுவதாகவும் தெரிவித்தனர்.

அதுவரை சிறுதொழிலுக்கு பாதகம் ஏற்படாமல் ஆண்டிற்கு ஆறு மாதம் மட்டும் இவ்வலைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.‌

மீன்துறை மூலம் கீழ்கண்ட மாற்று மீன்பிடி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்கள் இவற்றில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்பெற மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

1. பிரதான் மந்திரி மட்சய சம்பத யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்புள்ள ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூ.48 லட்சம், 40 விழுக்காடு மானியத்துடன் கட்டி வழங்கும் திட்டம்.

2. மாநில அரசு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூ.30 லட்சம், 50 விழுக்காடு மானியத்தில் கட்டி வழங்கும் திட்டம்.

3. கண்ணாடி நாரிழைப்படகு, இயந்திரம், வலை மற்றும் ஐஸ்பெட்டிகள் ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டில் ரூ.1.70 லட்சம், 40 விழுக்காடு மானியத்துடன் வழங்கும் திட்டம்.

இவைதவிர, முதலமைச்சர் அறிவுரையின்படி, சுருக்குமடி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகுகளுக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் மதிப்புள்ள வலையில் 40 விழுக்காடு மானியத்துடன் வழங்குவதற்கு புதிய திட்டம் செயல்படுத்த பரிசீலிக்கப்படும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஏனவே, மீனவர்கள் அரசின் விளக்கங்களைப் பரிசீலித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details