தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் தந்தை, மகன் ஊரடங்கை மீறி, கடை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் சந்தேக முறையில் உயிரிழந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பால் முகவர்கள் சங்கம் காவலர்களின் வீடுகளுக்குப் பால் கொடுக்க மாட்டோம் என அறிவித்தனர். இதற்கு நாகை மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் ஆயுதப்படை காவலர் ரமணன் ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
அவர் இட்ட பதிவில், 'பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம்' என்று மிரட்டும் தொனியில் பதிவிட்டிருந்தார். காவலர் ரமணன் பதிவிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நாகை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விளக்கம் கேட்டு நேற்று (ஜூன் 28) குறிப்பாணை(Memo) கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு அழைத்த நாகை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் காவலர் ரமணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே மக்கள் காவல்துறை மேல் அதிருப்தியில் இருக்கும் சூழலில், எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, இதுபோன்ற சில காவலர்களின் சர்ச்சைக்குரியப் பதிவுகள் உயரதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.