மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என அனைவரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நவீன முறையிலான கரோனா பரிசோதனை முறைகளை மதுரையைச் சேர்ந்த மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
புளூடூத் ஸ்டெதாஸ்கோப் மூலம் நவீன கரோனா பரிசோதனை - அசத்தும் தனியார் மருத்துவமனை!
மதுரை: புளூடூத் ஸ்டெதாஸ்கோப் மூலம் நோயாளிகளை தொடாமல் பரிசோதனை, சிறப்பான முறையில் என்95 முகக்கவசம் தயாரித்து வழங்கல், மூன்று மாறுபட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக கரோனா பரிசோதனை என மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை அசத்துகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் கூறியிருப்பதாவது, "நோயாளிகளை தொடாமலே அவர்களது உடல்நிலையைக் கண்டறியும் வகையில் புளூடூத் ஸ்டெதாஸ்கோப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சற்று தூரத்திலிருந்தவாறே நோயாளியின் உடல்நிலையை முழுவதுமாகக் கண்டறிவதுடன், ஒருவருக்கொருவர் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
மேலும் தனது தேவைக்காக தானே என்95 முகக்கவசங்களைத் தயாரிக்கின்ற இந்தியாவின் ஒரே மருத்துவமனையாகத் திகழ்வதுடன், மருத்துவமனைக்கு வருகை தருகின்ற நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பரிசோதிப்பதற்காக ஆர்டிபிசியார்(RTPCR), ட்ருநாட்(TRUNAAT), சிபி நாட் (CB NAAT) என்ற மூன்று மாறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தமிழ்நாட்டின் ஒரே மருத்துவமனையாகவும் திகழ்கிறது" எனக் கூறினர்.