ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்படாமல் உள்ள மருத்துவர் பணியிடங்கள் தொடர்பாக ராமநாதபுரம் கீழக்கரை தாலுகா, வெங்குளத்தைச் சேர்ந்த ராஜு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கீழக்கரை அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர், மற்றும் ஒரு ஆய்வக நிபுணர், மருத்துவமனை ஊழியர் என மொத்தம்18 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
எனவே, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நிரப்பப்படாமல் உள்ள மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு மீதான விசாரணை இன்று(ஜூலை 16) நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ராமநாதபுரத்தில் 95 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள மருத்துவர் பணியிடங்கள் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் உரிய ஆவணங்களுடன் தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.