தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னையா? மும்பையா? - இரு அணிகளின் ரசிகர்களும் முன்வைக்கும் லாஜிக் என்ன? ஓர் அலசல்! - ஐபிஎல் 2019

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இவ்விரு அணிகளின் ரசிகர்களும் முன்வைக்கும் சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்.

சிஎஸ்கே - மும்பை

By

Published : May 12, 2019, 5:28 PM IST

Updated : May 12, 2019, 6:11 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. இதில், ஐபிஎல் கிரிக்கெட்டின் இந்தியா - பாகிஸ்தான் என கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் எப்போது நேருக்கு நேர் மோதினாலும், அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்விரு அணிகளும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தலா மூன்று முறை வென்றுள்ளன. இதனால், நான்காவது முறையாக எந்த அணி கோப்பையை தட்டிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பன் மடங்கு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே - மும்பை

இதில், சென்னை அணி 2010-இல், மும்பை அணியை வீழ்த்தி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மும்பை அணி 2013-இல் சென்னை அணியை தோற்கடித்து கோப்பையை முதல்முறையாக தட்டிச் சென்றது. 2015-இல், மும்பை அணி மீண்டும் சென்னை அணியை வீழ்த்தி இரண்டாவது கோப்பையை வென்றது.

இந்த மூன்று இறுதி போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றனர் என்பது இங்கு நினைவுகூறவேண்டியதாகும். தற்போது இரு அணியின் ரசிகர்களும், புள்ளி விவரங்களின் அடிப்படையில் இணையதளத்தில் தங்களது அணிகள் வெற்றிபெறும் எனக்கூறவதற்கான காரணங்கள் இதோ.

மும்பை ரசிகர்களின் லாஜிக்

மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017 என ஒரு வருடம் கோப்பையை கைப்பற்றினால், அடுத்த வருடம் சொதப்புவதும், அதற்கு அடுத்த வருடம் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவதுமே அந்த அணியின் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இந்த லாஜிக்கின்படி 2019இல் மும்பை அணிதான் கோப்பையை வெல்லும் என்கிறார்கள் அந்த அணியின் ரசிகர்கள்.

ஹைதராபாத் ராசி

2017இல் இதே ஹைதாராபாத் மைதானத்தில்தான், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, புனே அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இதனால், ராஜீவ்காந்தி மைதானம் ரோகித் ஷர்மாவின் பேச்சை மீண்டும் ஒருமுறை கேட்கும் என்றே அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகின்றனர்.

மும்பை

மும்பையின் ஆதிக்கம்

இவ்விரு அணிகளும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியதில், மும்பை அணி 17 முறையும் சென்னை அணி 12 முறையும் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த சீசனில் மும்பை அணி மூன்று முறை சென்னை அணிக்கு தர்ம அடி வழங்கியுள்ளதால், இன்று நான்காவது முறையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரோகித் அண்ட் கோ ரசிகர்கள் உள்ளனர். மேலும், ரோகித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பில் மூன்றுமுறை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த மும்பை அணி மூன்றுமுறையும் கோப்பையை வென்றுள்ளனர். சென்னை அணியை போல், இறுதிச் சுற்றுக்கு முன்னேறி மற்ற அணி கோப்பை வெல்வதை வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்கிறனர், மும்பை ரசிகர்கள்.

சிஎஸ்கே ரசிகர்களின் லாஜிக்

சென்னை அணி 2010இல் கோப்பையை கைப்பற்றி 2011 கோப்பையை தக்க வைத்துக்கொண்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் கோப்பையை தக்க வைத்த ஒரே அணி என்ற பெருமையையும் சென்னை அணி படைத்தது. தற்போது, மீண்டும் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு இறுதிச் சுற்றில் விளையாட உள்ளது. இதனால், 2011ஆம் ஆண்டு போல 2019ஆம் ஆண்டிலும் சென்னை அணி கோப்பையைத் தக்க வைக்கும் என்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

சிஎஸ்கே

’அதே டெய்லர்... அதே வாடகை’ லாஜிக்:

2017 சீசனில், மும்பை அணியை தொடர்ந்து மூன்று முறை மண்டையில் கொட்டியது புனே அணி. ஆனால், இறுதிச் சுற்றில் மும்பை அணி புனே அணியை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இதனால், நடப்பு சீசனில் மூன்று முறை மும்பை அணியிடம் கோட்டு வாங்கியுள்ள சிஎஸ்கே, மும்பைக்கு இன்று தக்க பதிலடியை கொடுக்கும் என்ற ‘அதே டெய்லர்... அதே வாடகை’ லாஜிக்கை சென்னை ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

இரு அணியின் ரசிகர்களும் முன்வைக்கும் லாஜிக்கின்படி பார்த்தால், இரு அணிகளும் கோப்பையை வெல்ல சம அளவிலான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். எது எப்படியோ, ஆர்.ஜே பாலாஜி கூறுவது போல, ‘மேட்ச் இஸ் டிரா’ என்கிறார்கள் சிஎஸ்கே, மும்பை அல்லாத நடுநிலை கிரிக்கெட் ரசிகர்கள்.

Last Updated : May 12, 2019, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details