கரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், சிறு குறு வியாபாரி, கூலித் தொழிலாளர்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் லிச்சி பழ விவசாயிகள் அறுவடை செய்துள்ள லிச்சி பழங்களை விற்பனை செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து லிச்சி பழ விவசாயிகள் கூறுகையில், "ஊரடங்கினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேலையை இழந்துள்ளோம். லிச்சி பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்துச் சென்றோம். ஆனால், கரோனோ பீதியால் பொதுமக்கள் சந்தைக்கு வராததால், லிச்சி பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை" என்றார்.
தொடர்ந்து கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பாவாண்டா சாஹிப்பின் லிச்சிகள் கோடைகாலத்தில் பஞ்சாப், சண்டிகர், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் காட்சிக்கு வைக்கப்படும். கடந்த ஆண்டு ஆலங்கட்டி மழை பெய்ததால் அறுவடை பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஊரடங்கினால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அளித்திருந்தாலும் கரோனா அச்சத்தால் பொதுமக்கள் லிச்சி பழங்களை வாங்க தயங்குகிறார்கள். மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் லிச்சி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் வேலை இல்லாமல் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விட்டதால் லிச்சி பழத் தோட்டங்களில் பூச்சி மருந்து தெளிக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது.
இந்த கரோனா ஊரடங்கு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள நிலையில் லிச்சி விவசாயிகள், வியாபாரிகளையும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என கண்ணீர் மல்க கூறினர்.