கிரிக்கெட் திருவிழா எனக் கொண்டாப்படும், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், பரம வைரிகளாகக் கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 16ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஊடகங்கள் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை அவமானப்படுத்தும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் பிடிபட்டபோது, வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை கலாய்த்து பாகிஸ்தான் ஊடகங்கள் விளம்பரத்தை ஒளிப்பரப்புவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதில், அபிநந்தனின் உருவம் கொண்ட ஒருவர், ட்ரெட்கார்க் மீசையுடன் நீல நிற ஜெர்சியை அணிந்துகொண்டு கையில் டீ கப் உடன் கேமரா முன் காட்சியளிக்கிறார். அவரிடம், இந்திய அணியின் 11 வீரர்கள் தேர்வு குறித்தும், டாஸ் வென்றால் இந்திய அணியின் யுக்தி என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பட்டது.
அதற்கு, என்னை மன்னித்து விடுங்கள்; நான் இதைப் பற்றி உங்களிடம் சொல்லக் கூடாது என அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டபோது சொன்ன பதிலையே சொல்லி அவமதிக்கும் வகையில் கிண்டல் செய்துள்ளார்.
அத்துடன் டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, அருமையாக இருக்கிறது என அவர் பதிலளித்தார். இதன்பின் அந்நபரை நீங்கள் போகலாம் என்ற ஒரு குரல் கேட்கிறது. அந்தக் குரலுக்கு கீழ்படிந்தவராய் அந்த ஒட்டு மீசைக்காரரும் கிளம்புகிறார். அப்போது, அவரின் (இந்தியா) கையில் இருந்த கப்பை முகம் காட்டாத ஒரு கை (பாகிஸ்தான்) வாங்கிக் கொள்கிறது.
இதன் அர்த்தம் என்னவென்றால், இந்தியாவை அசால்ட்டாக வீழ்த்தி பாகிஸ்தான் உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்று இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வைரலாகிவரும் இந்த காணொளிக்கு, சமூக வலைதளவாசிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். பொதுவாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறும். இப்படி இருக்கும் தருணத்தில், பாகிஸ்தான் ஊடகத்தின் இதுபோன்ற விளம்பரத்தினால் இந்திய அணி, பாகிஸ்தானை பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக எழுந்துள்ளது.