சென்னை தங்க சாலை மணிகூண்டு அருகே நடைபெற்ற வாகன தணிக்கையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று சென்னையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்கள். இன்று அதிகாலை முதலே காவல் துறை அலுவலர்கள் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், இதுவரை இந்த ஐந்தாவது கட்ட ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 60, 131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52, 234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகுந்த இடைவெளியை பின்பற்றாதது, முகக்கவசம் அணியாதது, போலி இ- பாஸ் பயன்படுத்துவது என 24, 704 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பொய் கூறி போலி இ-பாஸ் தயார் செய்து பயணித்த 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதேபோன்ற ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க வேண்டும்.
இ-பாஸ்களை தவறாக யாரும் பயன்படுத்தக் கூடாது, போலி இ-பாஸ்கள் தயார் செய்து பயணிப்பது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறு பயணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.