தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கொல்லிமலையிலும் கோவிட்-19 பரவல் - கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம்!

நாமக்கல் : கொல்லிமலை பகுதியில் முதன் முறையாக பெண்கள் இருவர் உள்பட 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொல்லிமலையிலும் கோவிட்-19 பரவல்  - கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தது நிர்வாகம்!
கொல்லிமலையிலும் கோவிட்-19 பரவல் - கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தது நிர்வாகம்!

By

Published : Jul 5, 2020, 3:19 PM IST

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் 900க்கும் மேற்பட்ட சிவப்பு குறியீட்டு பகுதிகள் உள்ளன. தீவிரமடைந்து வருகின்ற கரோனா தொற்று காரணமாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர்.

குறிப்பாக, இதுவரை பரவலைக் கண்டிராத பல பகுதிகளும் தற்போதும் கடும் பாதிப்பை கண்டு வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய மூலிகை சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் கொல்லிமலையில் கடந்த நான்கு மாதங்களாக ஒருவருக்கு கூட கரோனா தொற்றுநோய் பாதிக்கப்படாத பாதுகாப்பான பகுதியாக இருந்தது.

கொல்லிமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க கொல்லிமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 14 ஊராட்சியைச் சேர்ந்த தலைவர்களும், மாவட்ட நிர்வாக அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், கொல்லிமலை சீக்குப்பாறைபட்டியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று (ஜூலை 5) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொல்லிமலைக்கு வெளி நபர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் மலைப்பாதைகள் அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியை சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு மாதங்களாக கரோனா தொற்று இல்லாத பகுதியாக கொல்லிமலை இருந்த நிலையில், ஒரே நாளில் புதிதாக ஐந்து பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details