தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (48). இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து கொடைக்கானல் அருகே உள்ள சேத்துப்பாறை பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அப்போது கூம்பூர் வயலை சேர்ந்த தாஸ் என்பவரின் மனைவி ஜான்சிராணி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளைப்பாறை பகுதியில் முருகன் என்பவரின் கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் முருகனின் தம்பி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் நாகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணை நடத்துவதற்காக காவலர்கள் சென்றபோது மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து டிஎஸ்பி ஆத்மநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து மணிகண்டனை தேடி வந்தனர். இதனிடையே ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் ஜான்சி ராணியின் தங்கை சாந்தி என்பவருடன் காதல் இருந்தது தெரியவந்தது. இந்த தொடர்பினை அவரது சகோதரியின் காதலன் திருப்பதி கண்டித்துள்ளார். இதில் மணிகண்டனுக்கும் திருப்பதிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பதியை கொலை செய்ய மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெற்ற புனித சலேத் அன்னை திருவிழாவைப் பார்த்துவிட்டு திருப்பதியை தங்களின் வீட்டுக்கு அழைத்துள்ளனர்.