இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டத்தில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட தளர்வு விதிகள் முறையாக கரூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படவேண்டும். சமீப காலமாக வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களால் பிற நபர்களுக்கு தொற்று பரவும் சூழல் நிலவி வருகிறது.
இதனால், வெளியூரில் இருந்து வரும் அனைவருக்கும் முறையான பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இருப்பவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று அல்லாதவர்கள் அரசின் விதிமுறைப்படி தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிக அளவிலான எண்ணிக்கையில் மக்கள் கூடுவது தொற்று உருவாக ஒரு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும், இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளிலும் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசின் விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் ஒன்றுக்கூடி தொற்று பரவக் காரணமாக இருப்போர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.