தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'மறைவுச் செய்தி கேட்டு கடும் துயருற்றேன்'- ஜெ. அன்பழகன் மறைவு குறித்து ஜெயம் ரவி - Cinema news

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவு குறித்து நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

By

Published : Jun 10, 2020, 10:23 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவையொட்டி அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ஜெயம் ரவி அன்பழகன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்பழகன் மறைவுச் செய்தி கேட்டு கடும் துயருற்றேன். அவர் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல. நல்ல இதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தவர். எனது திரைப்படம் 'ஆதிபகவன்' படத்தைத் தயாரித்தபோது, விலை மதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன் கழித்திருக்கிறேன்.

அந்த நினைவுகள் எப்போதும் மனதில் இனிமையானதாக நீங்காது இருக்கும். அவரோடு உரையாடியபோது கலை மீதும் திரைப்படங்கள் மீதும் அவரது பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பெருமைமிக்க அவரது அரசியல் பணிகள் மற்றும் அயராத மக்கள் பணிகள், மேலும் அவரது திரைப் பணிகளுக்காகவும் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காது அவர் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

கடும் துயர்மிக்க இந்த கோவிட்-19 சூழலில் அவரது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது, மக்கள் பணிகளில் தொடர்ந்து இயங்கியது அவரது மனிதத்தை என்றென்றும் சொல்லும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details