டெல்லி: ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், சிறு வணிகர்களை ஊக்கப்படுத்துவதற்காக உணவு டெலிவரி நிறுவனங்களான சுவிகி, சொமாட்டோ உடன் இணைந்து செயல்படவுள்ளது.
புகைப்பட பகிருதல் தளமான இன்ஸ்டாகிராம், உணவு டெலிவரி நிறுவனங்களான சுவிகி, சொமாட்டோவின் ஸ்டிக்கர்களை ஸ்டேட்டஸில் பதிவுசெய்ய முடியும் எனக் கூறியுள்ளது. சிறு வணிகர்களுக்கு உதவியாக இருக்க இந்நிறுவனம், இம்முயற்சியை எடுத்து உணவு டெலிவரி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.
இந்த ஸ்டிக்கர்களை சொடுக்கி, இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் உணவுகளைப் பதிவுசெய்து பெற்றுக்கொள்ள முடியும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிகி, சொமாட்டோ-வில் பதிவுசெய்துள்ள உணவகங்கள், தங்களின் இணைப்பை ஸ்டிக்கரின் உதவியுடன் உள்ளீடு செய்ய முடியும்.
இதனை சமூக வலைதளவாசிகள் சொடுக்கி, தங்களுக்குப் பிடித்தமான உணவை பதிவுசெய்யமுடியும். இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த அம்சத்தினைப் பெற, இதன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்று ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் அலுவலர் நிதின் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.