தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, இந்தோனேசியாவைச் சேர்ந்த மதபோதகர்கள் 11 பேர் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் வந்து தங்கியிருந்தது காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சேலத்தில் முதன்முதலாக இவர்களில் சிலருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கரோனா தொற்று பரப்பியதாக, 11 பேர், இவருக்கு உதவியாக சென்னையிலிருந்து வந்த ஒருவர், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் 18 பேர் மீது சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சேலம் டவுன் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.
சிகிச்சையில் பூரண குணமடைந்த பின்னர் அனைவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கு சேலம் (ஜேஎம்-2) நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்களின் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர்கள் தவறை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, 11 பேருக்கும் தலா ரூ.2000 வீதம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மற்ற ஆறு பேரும் யோசிக்க கால அவகாசம் கேட்டதால் 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.